×

கலெக்டர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் விவசாயி தர்ணா: மணல் கடத்தல் புகார் அளித்ததால் மிரட்டல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள வடவாம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (40). விவசாயி. இவர் நேற்று காலை தனது மனைவி சிலம்பரசி, மகள் திவ்யா, மகன் சக்தி ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அவர்கள் 4 பேரும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபடும் நபரை கைது செய்யக்கோரி அவர்கள் 4 பேரும் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிலம்பரசி கூறுகையில், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பற்றி போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததாக கூறி எனது கணவர் சிவாவை அதே கிராமத்தை சேர்ந்த 5 பேர் சேர்ந்து வெட்டினர். இதில் தலை, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த எனது கணவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் அன்பு உள்ளிட்ட 5 பேர் மீதும் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

அன்புவை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. இந்த சூழலில் அவர் எங்களை மிரட்டி வருகிறார். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதுடன் அன்புவை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை கேட்ட கூடுதல் கலெக்டர், இதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பேரில் அவர்கள் 4 பேரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Darna , Farmer Dharna with family in front of Collector's Office: Intimidation due to sand smuggling complaint
× RELATED கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4...